சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் சரியானது என்பதை அநுரகுமார ஏற்றுக் கொண்டுள்ளார்

• சஜித்துக்கு IMF திட்டம் தொடர்பில் எந்தத் தெளிவும் இல்லை.

• அதிகாரத்திற்காக பொய் சொல்லும் தலைவர்களிடம் நாட்டின் எதிர்காலத்தை நம்பி தவறு செய்து விடாதீர்கள்.

• மக்களுக்காக நான் பொறுப்பேற்ற பணியை நிறைவு செய்துள்ளேன்.

• நிச்சயம் நாட்டை முன்னேற்றி, இளைஞர்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவேன்- ஜனாதிபதி  ஹோமாகமவில் தெரிவிப்பு.

வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பித்த வேலைத்திட்டம் சரியானது என அநுரகுமார பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாசவுக்கு அது தொடர்பில் தெளிவு கிடையாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஹோமாகமவில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, 2022 ஆம் ஆண்டு மக்களுக்காக தாம் பொறுப்பேற்ற பொறுப்பை நிறைவேற்றி கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு தனது கடமையை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி கிடைக்கும் மக்கள் ஆணையின் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வதன் மூலம் இளைஞர்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டம் சரியானது என்பதை அநுரகுமார ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதால், அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் பற்றி எந்தத் தெளிவும்  இல்லாததால், இவ்வாறான தலைவர்களிடம் நாட்டை ஒப்படைத்து இந்த நாட்டு மக்கள் தவறிழைக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக முன்னேற எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்காக வாக்களித்து தமது கடமையை நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”அரசியல் வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அதற்குள் மகிழ்ச்சியும் இருக்கும். துயரமும் இருக்கும். எம்மை வாழ்த்துவதை போலவே திட்டித்தீர்ப்பார்கள். பிரசித்தமாவதை போன்றே மறக்கப்படுவோம். இப்படியொரு தொழலிருந்தே இப்போது ஜனாதிபதியாகியுள்ளேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்புதான் மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்தேன். முதலில் பிரதமராக நாட்டை ஏற்றபோது சவாலுக்கு முகம்கொடுத்தேன். எனக்கு மிகப்பெரிய பிரச்சினை இருந்தது. மக்கள் என்னை நிராகரித்ததால் என்ன செய்வது என்ற கேள்வி இருந்தது. மக்கள் ஒரு தலைவனை நிராகரித்தாலும். மக்களுக்கு கஷ்டம் வரும் வேளையில் தலைவனால் மக்களை நிராகரிக்க முடியாது.

2022 ஆம் ஆண்டில் தான் மிகப்பெரிய சவாலை காண வேண்டியிருந்தது. நாட்டு மக்கள் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டியிருந்தது. துரதிஷ்டவசமாக சில தலைவர்கள் மக்கள் ஆணையைப் பெற்றிருந்தாலும் மக்களை மறந்துவிடுவார்கள்.  ஆட்சி அதிகாரம் கிடைக்கும் வேளையில் தலைவர்கள் அதனை நிராகரிப்பது பொருத்தமற்றது.

ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. நான் வந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதோடு, நிதி அமைச்சையும் பொறுப்பேற்றேன். ஜூலை மாதமளவில் ஜனாதிபதி பதவியையும் ஏற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் சிந்தித்துப் பார்க்கூட எனக்கு நேரம் இருக்கவில்லை. நாடு மூழ்கும் நிலையில், இருந்ததால் நாட்டின் பாதுகாப்பு மட்டுமே முக்கியமாக தெரிந்தது.

மூழ்கவிருந்த கப்பலில் மாலுமி இருக்கவில்லை. கப்பலில் இருந்த பயணிகளுடனேயே கரைசேர வேண்டியிருந்தது. அவ்வாறு வங்குரோத்தான நாடுதான் எனது கைகளில் கிடைத்தது. முதலில் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வர வேண்டியிருந்தது. அதற்காக ஐ.எம்.எப் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் பேசி அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டோம். தற்போது அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

நாளை தனியார் பிணைமுறி வழங்குநர்களுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளோம். அதனால் வங்குரோத்து நாடு என்ற முத்திரை அகன்றுவிடும். அது எமது முதல் வெற்றியாகும். அதன் பின்னர் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்தி நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி உங்கள் எதிர்காலத்தை பலப்படுத்தவே ‘இயலும் ஸ்ரீலாங்கா’ திட்டத்தை முன்வைத்து உங்கள் ஆணையை கோருகிறேன்.

எனவே, மீண்டும் வங்குரோத்து அடையாத இலங்கையைக் கட்டியெழுப்ப எனக்கு வாக்களியுங்கள். மக்களுக்கு இப்போது நிவாரணம் வழங்கியிருக்கிறோம். படிப்படியாக வாழ்க்கை சுமை குறைக்கப்படும். புதிய பொருளாதார முயற்சிகளை நோக்கி நகர்வோம். 2025 ஆம் ஆண்டில் அந்த பணிகளை முன்னெடுப்போம்.

எனது எதிர்தரப்பு வேட்பாளர்களில் அநுர ஐ.எம்.எப் உடன்படிக்கை வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார். முடியாவிட்டால் ஒரு வருடத்தில் விலகுவதாக சொல்கிறார். அவ்வாறு கஷ்டப்படுவதை விடுத்து இப்போதே நாட்டை கையளித்துவிடலாம். மறுமுனையில் சஜித்தும் வேடிக்கை பேச்சுக்களைப் பேசுகிறார். அவரின் தந்தையை நானே பாதுகாத்தேன் என்பதையும் மறந்துபோயுள்ளார். எனவே ஐக்கிய தேசிய கட்சியினர் எனக்கு வாக்களிப்பதே பொருத்தமானது.

ஐக்கிய மக்கள் சக்தி சஜீத்  – பீரிஸ் அணி எமது வேலைத் திட்டங்களை சீர்க்குலைப்பதற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். எனவே அந்த பணியை நாம் மட்டுமே முன்னெடுக்க முடியும். புதிய இலங்கையைக் கட்டியெழுப்பவும் யாசகம் பெறும் நாடாக இருக்காமல் வலுவான நாடாக மாறுவதற்கு ‘இயலும் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டத்துடன் ஒன்றிணைவோம்.” என்றார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன,

“சஜித் பிரேமதாசவும், அநுரகுமாரவும் இந்த நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கிய போது நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. அந்த வரலாற்றுப் பொறுப்பை ஏற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்த பின்பே அதிலிருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதன் பின்னர் எதிர்கட்சிகளின் முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை கொண்டுச் சென்றார்.

முன்னாள் அமைச்சராகவும், பிரதமராகவும், சர்வதேச தொடர்புகளைக் கொண்ட அரசியல்வாதியாகவும் அனுபவம் நிறைந்த வேட்பாளராகவும் ரணில் விக்ரமசிங்கவே இந்த நாட்டை ஆள பொருத்தமான தலைவர் என்பதை கடந்த இரு வருடங்களில் நிருபித்துள்ளார்.

நாட்டில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அவ்வாறான வலுவான தலைமைத்துவமே அவசியமாகும். அரச நிர்வாகத்தை வழிநடத்தும் தலைவர் ஒருவரே நமக்கு தேவைப்படுகிறார். அதேபோல் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சர்வதேசம் நம்பக்கூடிய ஒரு தலைமைத்துவமே நாட்டுக்கு தேவைப்படுகிறது.” என்றார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

“ஜே.வீ.பியினர் நாட்டுக்குள் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு அதனால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு நாட்டின் அதிகாரத்தைக் கைபற்றுவதை இலக்கு வைத்துச் செயற்படுவதே வழமையாகும்.

மறுமுனையில் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஓடிவிட்டார். நாட்டில் பணம் அச்சிட முடியாதபோது, கடன் பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் பலவிதமான நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை ஆள வேண்டியிருந்தமையினால் இவர்கள் விட்டோடினர்.

ஆனால் அந்த சவால்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டு வழிநடத்தினார்.

இப்போது 22 ஆம் திகதி தேர்தலை வென்ற பின்னர் அநுரகுமார பாராளுமன்றத்தை கலைக்கப்போதாக கூறுகிறார். தனியொருராக நாட்டின் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு செயற்பட அநுரகுமார திசாநாயக்க முயற்சிக்கிறார். ஆயுதம் இல்லாத காலத்தில் ஆயுதத்தைத் தேடிக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சட்டபூர்வ அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” என்றார்.

சர்வமதத் தலைவர்கள், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, மேஜர் பிரதீப் உந்துகொட, மதுர விதானகே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல, நந்தன குணதிலக்க முன்னாள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

Share the Post:

Related Posts

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்

• அதற்காக கல்வி அமைச்சர் என்ற வகையில் அன்று வெள்ளை அறிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக ஜே.வி.பி. வீதியில் இறங்கியது. • Gen Z  தலைமுறைக்கு

Read More

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

• இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். • ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று அன்று கூறியது பொருளாதார சவாலை எதிர்கொள்ளவே: இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’

Read More